ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பை துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் மின்வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது. மேலும், ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியானது, கடந்த மார்ச் 31ம் தேதியோடு முடிவடைந்தது. இதனையடுத்து அனுமதியை புதுப்பிக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை மாசுகட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.