மதுரையில் அரசியல் பிரமுகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எமதர்மனுக்கு கண்டன போஸ்டர் அடித்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டுவது தற்போது ஃபேஷனாகிவிட்டது. திருமண விழா, காதணி விழா என எந்த விழாவிற்கும் போஸ்டர், பேனர் வைப்பது வழக்கம். அதிலும் திருமண விழா என்றால் நண்பர்கள் சேர்ந்து வித்தியாசமான முறையில் எல்லாம் போஸ்டர், பேனர் அடிப்பார்கள்.
கவிதைகள், கிண்டல்கள், வாழ்த்துகள் என அனைத்தும் விதவிதமாக போஸ்டரில் இடம்பெறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் போஸ்டருக்கு பேர் போன மதுரையில் ஒருவர் இறந்ததற்கு வித்தியாசமான முறையில் போஸ்டர் அடித்துள்ளனர். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆம் ஆச்சர்யம் தான். அவர்கள் அடித்தது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இல்லை. கண்டன போஸ்டர்.
மதுரை வடக்குமாசி பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் 51வது வட்ட திமுக பிரதிநிதியாக உள்ளார். இவரின் தந்தை அய்யாவு என்பவர் கடந்த 25 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு காலமாகியுள்ளார்.
இந்நிலையில், இவரின் இறப்பை தாங்கமுடியாத அவரது ஆதரவாளர்கள் எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம் என அச்சடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த போஸ்டரில் தங்கள் விநோதமான பெயர்களையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். பீம்பாய் வினோத், சீடை வினோத், வேட்டையன் பிரித்வி, குதிரை குத்தி சரவணன், நாய்ப்பால் ரஞ்சித் என பல்வேறு பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.