அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துகிறோம் என பெரியகுளத்தில் அதிமுக தொண்டர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து அதிமுகவின் தலைமை குறித்து அவ்வப்போது பிரச்னை எழுந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அதிமுக-வின் தலைமை குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலை மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அலுவலகம் உள்ள பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது பெரியகுளம் பகுதியில் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்டர் ஒட்டி சுரேஷ் என்பவரை விசாரித்தபோது அவர் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதாகவும் தற்போது அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண ஒரு தொண்டனாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிமுகவில் தலைமை குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் ஓபிஎஸ் ஆதரவாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் எடப்பாடிக்கு ஆதரவாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் இவை அனைத்தும் அக்கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே ஒட்டி வந்த நிலையில் தற்பொழுது ஒரு சாதாரண அதிமுக தொண்டர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.