poster
poster pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | ‘2,000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்’- போஸ்டரால் பரபரப்பு

webteam

செய்தியாளர்: பழனிவேல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகருக்கு செல்லும் வழியில் பல இடங்களில் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் 2,000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டு, செல்போன் நம்பர் ஒன்றும் இருந்தது. இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் புகைப்படம் எடுத்த நிலையில் அவை வைரலாகி வருகிறது. இந்த சுவரொட்டி அப்பகுதியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

money

இதையடுத்து சிலர் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், 2,000 ரூபாய் நோட்டுகள் தந்தால் 3 ஐநூறு ரூபாய் நோட்டுகள் தருவேன் என்றும், மாற்றி கொடுப்பதற்கு 500 ரூபாய் கமிஷன் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் பேசி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர், “நான் கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர். பொங்கல் பண்டிகையின் போது அவரது வீட்டை சுத்தம் செய்த போது நான்கு 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. அதை சென்னை ரிசர்வ் வங்கியில் சென்று மாற்றி வந்தேன். ஆகவே ரூ.500 கமிஷன் பெற்று இதை போல மாற்றலாம் என்ற எண்ணத்தில்தான் சுவரொட்டி ஒட்டினேன்” எனக்கூறியுள்ளார்.

money

இதைத் தொடர்ந்து போலீசாரிடம் பேசிய அவர், “உங்களிடம் ஏதேனும் 2,000 ரூபாய் நோட்டு உள்ளதா? கொடுங்க மாற்றித் தருகிறேன்” என்றும் கேட்டுள்ளார். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கூறுகையில், “இது சட்டப்படி தவறு. அதுவும் துண்டு நோட்டீஸ்கள் கொடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை பெறுவது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது விசாரித்து வருவதாக கூறினார்கள். இந்த சம்பவம் பர்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.