தமிழ்நாடு

போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி: கூடுதல் ஆணையர்

Sinekadhara

விசாரணை கைதி ராஜசேகர் மரண வழக்கில், அவரது உடலில் உள்ள காயங்கள் அவரது மரணத்துக்கு காரணமில்லை என முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரை கடந்த 12 ஆம் தேதி கொடுங்கையூர் போலீசார் குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையின்போது ராஜசேகர் திடீரென உயிரிழந்தார். உடல்நலக் குறைவுடன் இருந்த ராஜசேகரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதால் கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்ளிட்ட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

உடல் நலக்குறைவால் ராஜசேகர் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்ததை மறுத்து, தனது மகனை காவல்துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாகவும், ராஜசேகருக்கு உடல்நலத்தில் எந்த குறையும் இல்லை எனவும் அவரின் தாயார் உஷா ராணி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், தனது மகன் மரணம் தொடர்பாக கொலைவழக்கு பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது மகனின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுத்தர வேண்டும் எனவும், ராஜசேகர் குடும்பத்தார் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து ராஜசேகர் மரண வழக்கு தொடர்பாக உரிய விளக்கத்துடன் கூடிய அறிக்கையை 4 வார காலத்துக்குள் சமர்ப்பிக்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணை கைதி ராஜசேகரின் மரணம் தொடர்பான முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், 12-6-2022 இரவு 7.10 ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடல் வந்துள்ளது. ராஜசேகரின் பிரேதப் பரிசோதனையில், அவரது இடது தொடை, கைகள் மற்றும் கால் முட்டி பகுதிகளில் ரத்தக்கட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜசேகர் உடலில் மொத்தம் 4 வெளிக்காயங்கள் இருந்ததாகவும், காயங்களால் மரணம் நிகழவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் முதல் காயம் ராஜசேகரின் மரணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னும், இரண்டு மற்றும் மூன்றாம் காயம் 18 மணி நேரத்துக்கு முன்னும், நான்காவது காயம் 4 நாட்களுக்கு முன்னும் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜசேகரின் இதயத்தில் ரத்தக்கட்டு ஒன்று இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜசேகர் உடற்கூராய்வு செய்த வீடியோவை காண்பித்த பிறகே உடலை வாங்கப்போவதாக தாயார் உஷா ராணி மற்றும் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மரணத்துக்கான காரணம் விஸ்ரா அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F2768678113277265%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

கொடுங்கையூர் விசாரணை கைதி சந்தேக மரண வழக்கு தொடர்பாக சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களை சந்திப்பு பேசுகையில், “ராஜசேகர் மரணம் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் 4 காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த காயங்களால் மரணம் அடையவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கைக்கில் தகவல் தெரியவந்துள்ளது. காவல் துறையினர் தாக்கவில்லை என்பதற்கு சாட்சி பிரேத பரிசோதனை அறிக்கையே. போலீஸ் பூத்தில் விசாரணை நடத்தியது தவறு இல்லை. பணம் பேரம் எதுவும் பேசப்படவில்லை. அது தவறான தகவல். ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறினார்.