சட்டமன்றத்தில் அரசு ஆதரவாக வாக்களிக்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்குப் பதியப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டு குதிரை பேரம் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வரின் முன்னரே எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து தீவிரமான கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்கமாக தனது கட்சி எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக கூறி, அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். அதே போல அதிமுக பொதுச்செயலாளரும் தனது கட்சி உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், குதிரை பேர விவகாரத்தில் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்குப்பதிய வாய்ப்பு இருப்பதாக அதிமுக எம்.பி இன்பதுரை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 1993-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களின் ஆதரவை குறுக்குவழியில் பெற்ற மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், பூட்டாசிங் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது என்று கூறியுள்ளார்.
மேலும் அதே பாணியில் தற்போது முதல்வர் விஜய் மீதும் சிபிஐ வழக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணையில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க இந்த எம்.பிக்களுக்கு தலா சில லட்சங்கள் முதல் கோடிகள் வரை லஞ்சமாக வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாக்களித்த எம்.பி.க்களைத் தண்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது பெரும் சர்ச்சையாக உருவானது. எனினும் கடந்த 2024-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த பழைய தீர்ப்பைத் தவறு என்று கூறி ரத்து செய்து, லஞ்சம் வாங்குவது நாடாளுமன்றப் பாதுகாப்பிற்குள் வராது என்று தீர்ப்பளித்தது.
அதோடு, இந்த வழக்கில் நரசிம்ம ராவ் மற்றும் பூட்டா சிங் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், 2002-ல் டெல்லி உயர் நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.