தமிழ்நாடு

ஸ்டாலினுடன் நாளை பூண்டி.கலைவாணன் சந்திப்பு?

ஸ்டாலினுடன் நாளை பூண்டி.கலைவாணன் சந்திப்பு?

webteam

திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் சென்னையில் நாளை ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஜனவரி 4 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் எனவும் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 2 முதல் 3 ஆம் தேதி வரை வழங்கலாம் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

மேலும், வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் எனவும் விண்ணப்ப படிவம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜனவரி 4 ஆம் தேதி அறிவிக்கப்படுவார். போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும். வெற்றி பெறக்கூடிய அளவுக்கு எங்களின் வியூகம் அமைந்திருக்கும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் திமுக யாரை முன்னிருத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவாரூர் என்றாலே கருணாநிதி என்றே இருந்து வந்த நிலையில் அவர் இல்லாத இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்பதே திமுக வேட்பாளர் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் சென்னையில் நாளை ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவே அவர் சென்னை கிளம்பிவிட்டதாகவும், நாளை காலை ஸ்டாலினை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.