தமிழ்நாடு

என்.ஐ.ஏ கைது செய்த இருவருக்கு நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு

என்.ஐ.ஏ கைது செய்த இருவருக்கு நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு

webteam

பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்ற புகாரில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ள இருவரையும் ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை தமிழகத்தில் உருவாக்க முயன்றதாக சென்னையைச் சேர்ந்த சையது புகாரி மற்றும் நாகையைச் சேர்ந்த ஹசன் அலி, ஹரிஷ் முகமது ஆகியோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்பட 9 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்டாப்புகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. 

3 பேரும் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹசன் அலி மற்றும் ஹரிஷ் முகமதுவை கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை நாகையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இருவரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.