நாகை மாவட்டம் சீர்காழி அருகே கெயில் எரிவாயு குழாய்களை புதைக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழைய பாளையம் ஓ.என்.ஜி.சி.யில் இருந்து மேமாத்தூர் வரை இயற்கை எரிவாயு எடுத்துச் செல்ல விளைநிலங்கள் வழியே சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கான பூமி பூஜை வேம்படி கிராமத்தில் செய்யப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்புடன் ராட்சத குழாய்களும் இறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இருவக்கொல்லை மற்றும் வேம்படி கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பின்றி பணி தொடங்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ள அவர்கள், தங்கள் கருத்தை கேட்கக்கோரி சீர்காழி காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.