பெண்கள் குறித்து கொச்சையாக பேசியிருந்த வனத்துறை அமைச்சர் பொன்மொடிக்கு திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில், அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதுவை குறிப்பிட்டு மிகவும் கொச்சையான கருத்துகளை பேசியிருந்தார் . மேலும், சைவம், வைணம் குறித்தும் தாகாத சித்திரத்தில் பேசியிருந்தார்.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது மட்டுமல்லாது, திமுகவை சேர்ந்தவர்களே கடிந்துகொள்ளும் அளவிற்கு பலரது கண்டனத்தையும் பெற்று வந்தது.
இந்தநிலையில், திமுக எம்பி கனிமொழி அமைச்சர் பொன்முடி கருத்தை கண்டித்து தனது x வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. “ என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைமை கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அது குறித்து தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“ கழக துணைப்பொதுச்செயலாளர் க.பொன்முடி அவர்கள், அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக, பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பும் உடனடியாக வெளியாகியுள்ளது.
பெண்கள் ஓசியில் பேருந்தில் பயணிக்கிறார்கள் என்று இதுப்போன்ற பல சர்ச்சை பேச்சுக்களை பேசுவது அமைச்சர் பொன்முடிக்கு இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கட்சி பதவி மட்டுமல்லாது அமைச்சர் பதவியும் பறிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.