தமிழ்நாடு

ஓபிஎஸ் உருப்படியாக ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை: பொன்முடி

webteam

3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் உருப்படியாக ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணம் பற்றி முதலமைச்சர் பதவியில் இருந்த போது ஓபிஎஸ் ஏன் கோரவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பியதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தக் கேள்விக்கு பன்னீர் செல்வம் பதில் சொல்ல முடியாமல் தவித்தார் என்றும் அதன் மூலம் டிடிவி தினகரன் அணியும் பன்னீர் செல்வம் அணியும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தார்கள் என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மையாகி இருக்கிறது என்றும் பொன்முடி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக இருந்த போது அதிகாரிகளிடம் மர்ம மரணம் குறித்து விசாரிக்க விவாதித்தேன் என்கிறார். அந்த அதிகாரிகள் யார் யார் என்ற பெயர் பட்டியலை வெளியிட பன்னீர் செல்வத்திற்கு துணிச்சல் இருக்கிறதா என பொன்முடி அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த போது தமிழகத்தின் கடன் 3.14 லட்சம் கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ள பொன்முடி, பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த போது ஒரு உருப்படியான திட்டத்தையாவது நிறைவேற்றியதாக சொல்ல முடியுமா? என்று கேட்டுள்ளார்.

ஸ்டாலின் தலைமையில் விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமையும் எனவும் அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணை கமிஷனை நிச்சயம் அமைப்பார் என்றும் அந்த விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராக டிடிவி தினகரன் அணியும் ஓபிஎஸ் அணியும் தயாராக வேண்டும் எனவும் பொன்முடி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.