தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் : திமுக எம்.எல்.ஏ பொன்முடி 

நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் : திமுக எம்.எல்.ஏ பொன்முடி 

webteam

நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் என திமுக எம்.எல்.ஏ பொன்முடி தெரிவித்துள்ளார். 

 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ளார் என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏ பொன்முடி, “நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான். இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல். நிர்மலா சீதாராமன் நீட் தேர்வு வராமல் பார்த்துக்கொள்வோம் என்று கூறினார்கள். இதுபோன்று பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டு எங்களை குறை கூறுகிறார்கள். ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கே இந்த நிலைமை என்றால் ஆளுங்கட்சி என்ன செய்யப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. மாநில அரசு தலை சாய்க்கிறது” என்று தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேட்டி அளித்த சமூக கமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் ரவீந்தரநாத் கூறுகையில், “நீட் மசோதா விலக்கு நிராகரிப்பு நேர்மையற்ற செயல். கல்வியை முழுமையாக மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.