தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

Rasus

பொங்கல் பண்டிகைக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் நாளை மறுநாள் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் 5 மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து இன்று 3069 பேருந்துகளும், 12-ஆம் தேதி- 4054 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி 4,147 பேருந்துகளும், பிற பகுதியில் இருந்து 3 நாட்களுக்கு 6,423 பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விழுப்புரம், கோவைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திராவுக்கு அண்ணா நகர் மேற்கில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்கு அடையாறில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூருக்கு பூந்தமல்லியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்காக 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன. www.tnstc.in என்ற இணையதள முகவரியில் பேருந்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், புகார் மற்றும் தகவல்களுக்கு 044 24794709 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.