உழவர்களின் உன்னத திருநாளான பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உழவர்கள் தங்கள் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தை முதல்நாளில் பொங்கல் திருநாளை கொண்டாடுவது பாரம்பரியம். அதன்படி மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புது மண்பானையில் கோலமிட்டு, புத்தரிசியில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். தை மாதத்தின் முதல் நாளான இன்று, தமிழகம் மட்டுமன்றி, உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் பொங்கல் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைத் திருநாளை தொடர்ந்து நாளை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று, உழவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகள், உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் மாடுகளை அலங்கரித்து மரியாதை செய்வர். அன்று தமிழர்களின் வீர விளையாட்டான மாடுபிடித்தல் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிப்பதால், போட்டி நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.