பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்!

PT WEB

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மதம், சாதி என எந்த பாகுபாடுகளும் இன்றி கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் மட்டுமின்றி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தினரும், சமத்துவத்தை பேணிக்காக்கும் விதமாக, இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், இந்த பொங்கல் பண்டிகை, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பொங்கல் விழாவினை கொண்டாடினர். மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளுக்கு முன்பு பொங்கல் வைத்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முளகுமூடு தூய மரியன்னை தேவாலயத்தில் வண்ண கோலங்கள் போட்டு, புத்தாடை அணிந்து பானையில் பொங்கல் வைத்து கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடியிருந்தவர்கள் ஆடி, பாடி உற்சாகமாக பொங்கல் விழாவினை கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை நடத்தினர்.

இதேப் போன்று கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேவாலயம் முன்பு கூடி குடும்பத்துடன் சேர்ந்து கோலமிட்டு, பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

சமத்துவம் குறித்து தொடர்ந்து பலரும் குரல் கொடுத்துவரும் இந்த காலக்கட்டத்தில், தமிழர்களின் பண்டிகையான பொங்கல் அதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது என்றால் அது மிகையல்ல.