புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும்விதமாக, சலூன் கடையில் நூலகம் நடத்தி வருகிறார் இளைஞர். யார் அவர்? அவரின் கனவு சாத்தியமானது எப்படி?
அழகழகாய் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள், தேசத் தலைவர்களின் புகைப்படங்கள் என அமைதியுற காட்சியளிக்கும் இந்த இடம் நூலகம் அல்ல, இது ஒரு சலூன் கடை என்றால் பலருக்கும் சற்று வியப்பாகதான் இருக்கும். நடிகர், நடிகைகளின் படங்கள், அரசியல் தொடர்பான விவாதங்கள், சினிமா பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் சலூன் கடைகளுக்கான இலக்கணத்தையே மாற்றி அமைத்திருக்கிறார் பொன்.மாரியப்பன்.
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த பொன்.மாரியப்பன் 8ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர். வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலைபார்த்தபோது, படிப்பின் முக்கியத்துவத்தையும், புத்தக வாசிப்பின் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறார். இதனால், தான் நடத்திவரும் சலூன் கடையில், 200 புத்தகங்களை வாங்கி வைத்திருக்கும் மாரியப்பன், குட்டி நூலகம் ஒன்றையே அமைத்துள்ளார்.
சிகை திருத்துவதற்காக காத்திருக்கும்போது, வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ள இளைஞர்களை, கொஞ்சம் தட்டி எழுப்பி, அவர்களுக்கு இலக்கியம், நாவல், கவிதைகள் எனப் பல நல்ல புத்தகங்களை படிக்க இவர் ஊக்கமளித்து வருகிறார்.
இதுகுறித்து மாரியப்பன், “எனது கடைக்கு வரும் மாணவர்கள் செல்ஃபோன்களை பார்ப்பதற்கு பதிலாக புத்தகங்களை பார்க்கின்றனர். படித்து விட்டு அது குறித்த கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்வது எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது” என்றார்.