தமிழ்நாடு

“என் மீது புகார் அளித்த அதிகாரிகளை யாரோ இயக்குகிறார்கள்” - பொன்.மணிக்கவேல்

rajakannan

தன் மீது புகார் அளித்தவர்களை யாரோ இயக்குகிறார்கள் என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த 13 பேர் பொன்.மாணிக்கவேல் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப்பதிவு செய்யச்சொல்லி வற்புறுத்துவதாக பொன்.மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டியிருந்தனர். 

பின்னர் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவன், “பணியின் போது பொன்.மாணிக்கவேல் எங்களை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. இதுவரை விசாரிக்கபட்ட 333 சிலைக் கடத்தல் வழக்குகளில் எந்தக் குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. அத்துடன் எந்தச் சிலைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 3 மாதத்திற்கு முன்னர் ஒரு சிலையை கண்டுபிடித்தனர். வேறு எதுவும் பிடிக்கப்படவில்லை. 

நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் யாரையும் விசாரிக்க விடவில்லை. அவர் கூறும் வழக்கை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒரு குற்றவாளியை கொடுத்து, அவரை ரிமாண்ட் செய்து என்ன செய்ய வேண்டும் எனக் கூறுவார். மற்றபடி அந்தக் குற்றவாளி யார்? எங்கிருந்து பிடிக்கப்பட்டார்? என எதையும் கூறமாட்டார். உண்மையான குற்றவாளிகளை அவர் பிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தன் மீது சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அளித்த புகார் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் பேசிய அவர், “என் மீது புகார் அளித்த 21 பேரும் ஒரு எஃப்ஐஆரை கூட பதிவு செய்ததில்லை.  புகார் அளித்த அதிகாரிகளை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குகிறார்கள். குற்றச்சாட்டுகளை கூறிய காவல் அதிகாரிகள் இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. எஃப்ஐஆர் பதியாத போது, பணிச்சுமை என அதிகாரிகள் எப்படி கூற முடியும்? அயல் பணி காவலர்களை பிற உதவிக்காகத்தான் பயன்படுத்தினோம். 47 குற்றவாளிகளைப் பிடித்ததில், அந்தந்த மாவட்ட ரிசர்வ் காவலர்களே பங்காற்றினர்” என்றார்.

மேலும் அவர், “பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் வழக்கை நீதிமன்றம் எங்களிடம் ஒப்படைத்தது. என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது. புகார் கூறியவர்கள் இதுவரை பணி மாறுதல் கேட்டு ஒரு மனு கூட தரவில்லை. போதுமான ஆட்கள் இல்லை, இருக்கும் நபர்களை வைத்து பணி செய்கிறோம்” என்று கூறினார். 

முன்னதாக, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் நீதிமன்றம் தற்போது தலையிடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.