பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்றும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. தஞ்சை அரசுக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் பாலியல் கொடூரத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கண்டு இனி யாரும் பெண்களை தொட நினைக்கக்கூடாது என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
இதுதவிர, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்துறைப் பூண்டி பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.