பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதுதொடர்பாக அதிமுகவிலிருந்து நாகராஜ் என்பவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் பல பெண்களை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து நீண்ட காலமாக மிரட்டி வந்துள்ளது. இந்நிலையில் அந்தக் கும்பலைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டது. தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்தப் பெண்ணை கடந்த மாதம் 12-ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அவரது காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்தப் பெண்ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதை வைத்து அவரிடமிருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, அதன்அடிப்படையில் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என விசாரிக்கப்படு வருகிறது. இந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர் அதிமுக பிரமுகர் ஆவார்.
இந்நிலையில் நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கன்னியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை புறநகர் மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கழக உடன்பிறப்புகள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்துள்ளனர்.