பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இன்னும் தமிழகத்தில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு அமைப்பினரும் இந்தக் கொடூரத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் முக்கிய கோரிக்கையாக, வழக்கை உடனே சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்பதுதான். சிபிஐ வழக்கை விசாரிக்க பரிந்துரை செய்து ஏற்கனவே தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே வழக்கை தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்கள் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு என்பவரை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இதில் பல வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் காணொளி காட்சி மூலம் பொள்ளாச்சி நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேருக்கும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.