பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, டிஜிபி, டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, காவல்துறை 4 பேரை கைது செய்தது. இந்நிலையில், இந்தக் கும்பல் இளம் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன் கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ பதிவு தமிழ்நாட்டைக் கொந்தளிக்கச் செய்தது.
இந்த பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை மிரட்டியதாக 4 பேர் என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி, டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி-யின் பெண் எஸ்.பி ஒருவர் இந்த வழக்கை விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.