தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பதிவில், “அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் மு.க.ஸ்டாலின்! யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!யார் அந்த SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க, மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.