pollachi school student got first mark after revaluation PT web
தமிழ்நாடு

பொள்ளாச்சி | மறுகூட்டலில் இன்ப அதிர்ச்சி.. மேலும் ஒரு 100.. மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவன்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டல் அடிப்படையில் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த பொள்ளாச்சி தனியார் பள்ளி மாணவன் சாதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

PT WEB

செய்தியாளர் - ரா. சிவபிரசாத்

தமிழகத்தில் நடந்த முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்கு பிறகு மதிப்பெண்ணில் மாணவர்களுக்கு சந்தேகம் இருந்தால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் குருதீப் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், ஆங்கிலம்,கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் மொத்தம் 494 மதிப்பெண் பெற்றிருந்தார்.

இந்நிலையில், சமூக அறிவியல் பாடத்தில் குறைவான மதிப்பெண் போடப்பட்டு இருப்பதாக கூறி மறு கூட்டலுக்கு மாணவன் விண்ணப்பித்தார்.

மறு கூட்டலில் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் போடப்பட்டது. இதனால் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மறு கூட்டல் அடிப்படையில் 500 க்கு 499 மதிப்பெண் பெற்ற அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் இன்று இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் மறு கூட்டல் அடிப்படையில் 499 மதிப்பெண் கிடைத்து தமிழகத்தில் முதலிடத்தை பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவன் குருதீப் தெரிவித்தார்.