பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் மே 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .
தமிழகம் முழுக்க மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை உயர் நீதிமன்றப் பதிவாளர் அல்லி அறிக்கை வெளியிட்டார்.
அதன்படி பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் இப்போது கரூர் மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் அதேபோல சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த ராஜலட்சுமி இப்போது விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்த நந்தினி தேவி கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமாா், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிபிஐயும் விசாரணை நடத்தி 3 முறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டநிலையில், 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், கடந்த வாரம் தினசரி விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்பு உள்ளிட்ட இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மே 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களுக்குள் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி உட்பட மாவட்ட நீதிபதிகள் 77 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும் மே 30 ஆம் தேதி வரை அவர் கோவை மகளிர் நீதிமன்றத்திலேயே பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போதுமே அரசு அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படியே இந்த பணியிடமாற்றமும் நடைப்பெற்றிருக்கிறது என்று கூறப்படுகிறது,