தமிழ்நாடு

பொள்ளாச்சி கொடூரம் எதிரொலி : நாகராஜ் பாரை சூறையாடிய மக்கள்

பொள்ளாச்சி கொடூரம் எதிரொலி : நாகராஜ் பாரை சூறையாடிய மக்கள்

webteam

பொள்ளாச்சியில் பாலியல் கொடூரம் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த பார் நாகராஜின் மதுபான பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி, அடித்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாசமாக வீடியோ எடுத்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சதீஷ், சபரீராஜன், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு ஆதரவாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாகராஜ் என்பவர், பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு உள்ளே அமைந்துள்ள மதுபான பாரை குத்தகைக்கு எடுத்துள்ளார். பாலியல் கொடூர வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக ‘பார் நாகராஜ்’ கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்தார். பாலியல் கொடூரம் வழக்கு தொடர்பாக பொள்ளாச்சியில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பார் நாகராஜின் மதுபான பாருக்கு வந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாரை அடித்து நொறுக்கியதோடு, மதுபானக் கடைக்கு அருகே கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நி‌கழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.