பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கக்கோரியும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கல்லூரி மாணவ- மாணவிகள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். திருச்சி மற்றும் கோவை, திருவண்ணாமலை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி என பல இடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கல்லூரிகளில் இருந்து ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து பாலியல் கொடூர விவகாரத்தில் போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் சில தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடுமலை சாலை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொள்ளாச்சியின் பல முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு மூன்றாவது நாளாக மாணவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, உடுமலையில் உள்ள ஜி.வி.ஜி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் உடுமலை பழனிசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதேபோல பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளின் சார்பில் கண்டன பேரணி தொடங்கியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.