பொள்ளாச்சி குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய உச்ச பட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டியது காவல்துறையின் கடமை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் மற்றும் நெட்டிசன்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அனைவரும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெண்ணை தாயாக, சகோதரியாக பாவிக்கும் நம் தமிழ் சமூகத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதோடு வெட்கித் தலைகுனிய செய்கிறது. குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய உச்ச பட்ச தண்டனையை பெற்று தரவேண்டியது காவல்துறையின் கடமையாகும். குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பிவிடக்கூடாத வகையில் உரிய வகையில் விசாரணை நடைபெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.