தமிழ்நாடு

நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் பொள்ளாச்சி கொடூரத்திற்கு ஏன் தரவில்லை? - நீதிபதிகள் வேதனை

நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் பொள்ளாச்சி கொடூரத்திற்கு ஏன் தரவில்லை? - நீதிபதிகள் வேதனை

rajakannan

டெல்லியில் நிர்பயாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.  

பொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி  பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, வெளியாகியுள்ள இந்தக் கொடூர சம்பவம் பலரையும் உறையவைத்துள்ளது. இச்சம்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘நிர்பயாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்படவில்லை; தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிக்கின்றன’ என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாம்பசிவம் என்பவர் கஜா புயல் பாதிப்பு நிவாரணம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளனர். இவ்வழக்கின் போதுதான், தேசிய ஊடகங்கள் நகர்ப்புறங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஊரகப் பகுதிகளுக்கு கொடுப்பதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.