பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணை வன்கொடுமைக்கு ஆளாக்கி, ஒரு சவரன் நகையும் கேட்டு மிரட்டுவதாக பொள்ளாச்சி காவல் துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, பொள்ளாச்சி பகுதியில் சொகுசுக் காரில் உலா வந்த சபரிராஜ், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரை கடந்த 25 ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியிருப்பதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பியதாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலர் சிங்கை ராமசந்திரன் புகார் அளித்தார். சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் இந்தப் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கும் போது பொள்ளாச்சி ஜெயராமனும் உடன் வந்தார். சிங்கை ராமசந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி கொடூர சம்பவம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக செயல்படுகிறது. பாலியல் கொடூர சம்பவம் எதுவானாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது. அப்படி செய்தால் அது அநாகரிகமான செயல்” என்று தெரிவித்தார்.