பொள்ளாச்சி அருகே குழி தோண்டும் போது நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் இருந்து உயரழுத்த மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள குள்ளக்காபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவருக்கு உமா என்ற மனைவியும் பத்து வயதில் மகனும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தங்கராஜ் தன்னுடைய தோட்டத்தில் புதிய பைப் லைன் பாதிப்பதற்காக குழி தோண்டும் உதவிக்கு பாலகிருஷ்ணனை அழைத்துவந்து தன் தோட்டத்தில் உள்ள கிணறு அருகே குழி தோண்ட ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து இரண்டு அடி வரை தோண்டிய பாலகிருஷ்ணன் கிணறு அருகே துளை இடுவதற்காக கடப்பாரை கொண்டு தோண்டியபோது மோட்டார் அறைக்கு செல்லக்கூடிய உயர் அழுத்த மின்சார கம்பி மீது கடப்பாரை உரசியதில் மின்சாரம் தாக்கி பாலகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தோட்ட உரிமையாளர் தங்கராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல்நிலைய போலீசார் அந்த பகுதிக்கு உட்பட்ட சங்கம்பாளையம் பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கினார். பின்னர் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், இந்த மின்சாரம் கம்பியில் பாய்ந்து கொண்டிருக்கும் போதே குழிதோண்டும் பணிகளை செய்தது தவறானது. ஆகவே அஜாக்கிரதை காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த பொள்ளாச்சி தாலுகா காவல்நிலைய போலீசார் பாலகிருஷ்ணன் மனைவி உமாவிடம் விளக்க கடிதத்தை பெற்றுக்கொண்டு விசாரணையை விபத்து என முடித்து விட்டனர். பாலகிருஷ்ணனின் இறப்பு குள்ளக்காபாளையம் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.