அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ, தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் pt web
தமிழ்நாடு

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ., முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்... நிபந்தனைகளுடன் அனுமதி ?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

PT WEB

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சிக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் பின்பற்ற வேண்டிய முக்கிய நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த நிலையில் தான், தமிழக அரசு அரசியல் கட்சிக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பான முக்கிய ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசுச் செயலர்கள் பங்கேற்றனர். அரசியல் கட்சிகளின் பரப்புரைகளின்போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தலைவர்கள் சாலைவலம் செல்லும் பகுதியில் போதுமான குடிநீர் வசதி இருக்க வேண்டும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல இடவசதி இருக்க வேண்டும், பொது போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.