உதயநிதி, அண்ணாமலை, அன்புமணி
உதயநிதி, அண்ணாமலை, அன்புமணி pt web
தமிழ்நாடு

"யாகாவா ராயினும் நாகாக்க.." வரம்பு மீறும் வார்த்தைகள்.. தேர்தல் காலத்தில் எல்லை மீறும் தலைவர்கள்!

PT WEB

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த நிலையில், பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் படபடக்கின்றன. எங்கும் அனல் பேச்சுகள். கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றன. இந்த எல்லைவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், பேச்சுக்கள் வரம்பு மீறுகையில், அரசியல் தலைவர்களுக்கு உண்டான பண்பும் கேள்விக்குள்ளாகிறது.

முதலில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அமைச்சர் உதயநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணல் குறித்தும் அந்த நெறியாளர் குறித்தும் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. வார்த்தைகளுக்கான கண்டனங்கள் வலுக்க, கண்டங்களுக்கு அவர் விளக்கம் இன்னும் பலரது விமர்சனங்களைப் பெற்றது. ஊடகவியலாளர்கள் அவரது பேச்சைக் கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டங்களை எல்லாம் நடத்தினர். சில பத்திரிக்கைகள் அவரது பெயரை தவிர்க்கப் போவதாக எல்லாம் அறிவித்தது.

பாஜக உடனான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, அதிமுக தங்களது கூட்டணியில் விசிகவை இணைப்பதற்கான முயற்சியை சுட்டும் வகையில், அவர் கூறிய வார்த்தை வரம்புமீறியது என்றே பொருள்.

இளைஞர்களுக்கான கட்சி எங்களுடையது, நாங்கள் இளைஞர்களுக்கானவர்கள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வார்த்தைகளிலும் கவனம் கொள்ள வேண்டும். இரு தலைவர்களுக்கும் அது தவறான பொருள் தரக்கூடிய வார்த்தைகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த வார்த்தைகள் சில பகுதிகளில் தவறான பொருளில் உபயோகிப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கத்தானே செய்கிறது. அதை யாரேனும் ஒருவர் சுட்டிக் காட்டினாலும் கூட, தங்களை அனைவருக்குமானவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் மன்னிப்பு கேட்பதே மாண்பு. அதைவிடுத்து நான் சொல்லியதற்கு இதுதான் பொருள் என்று விளக்கம் கொடுப்பது, தலைவர்களுக்கான மரியாதையைத்தான் கெடுக்குமே தவிர, மக்கள் அதைக் கடந்துவிடுவார்கள். அந்த தைரியத்தில் தான் இதுபோன்ற வார்த்தைகளைக் கூறி, அதற்கு காரணத்தையும் சொல்கிறார்களோ என்னவோ?

இது ஒருபுறம் என்றால், இன்னொரு உருவக்கேலி. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையில், எய்ம்ஸ் என குறிப்பிட்டு செங்கல்லை ஒன்றை, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாதற்கான குறியீடாக பயன்படுத்துகிறார். கடந்த தேர்தலில் திமுகவின் பரப்புரை யுக்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த பரப்புரை. அதையே, தற்போதைய தேர்தலில் மீண்டும் பயன்படுத்துகிறார். இதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “ஸ்க்ரிப்ட்டை மாத்துப்பா.. கதையையும் மாத்து..” என விமர்சித்திருந்தார்.

வேறொரு பரப்புரையில் இதைக் குறிப்பிட்ட உதயநிதி, “நானாவது கல்லைத்தான் காட்டினேன், எடப்பாடி பல்லைக் காட்டுகிறார்” என பிரதமர் மோடியுடன் இபிஎஸ் உரையாடும் புகைப்படத்தை காட்டி விமர்சித்தார்.

இன்னும் எத்தனையோ தலைவர்கள், மக்களிடம் பேசுகையில், பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பொதுவெளிகளில் உபயோகிக்கும் போது, அவரைப் பின்பற்றும் இளைஞர்களுக்கும் அது சாதாரண வார்த்தைகளாக மாறிவிடும் அபாயம் உண்டு. ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்னும் 20 நாட்களுக்கு மேல் உள்ளது. இந்த மூன்று வார பரப்புரையின் போது அரசியல் தலைவர்கள் கண்ணியத்துடன் வார்த்தைகளை பயன்படுத்தி பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரது வலியுறுத்தலாக இருக்கிறது.