விஜய் முகநூல்
தமிழ்நாடு

’இனிமே எங்களுக்கும் அவங்களுக்கும்தான் போட்டியே’ - விஜய் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் சொன்ன பதில்!

விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்தநிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இவருக்கு அளித்த பதில் வினை என்ன பார்க்கலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில் பேசிய விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என்று தெரிவித்த விஜய், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக , திமுகவிற்கு இடையில்தான் போட்டி என்று பேசியிருந்தார். மேலும் , பிரதான எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவை குறித்து தற்போதுவரை விஜய் எதுவும் பேசாமல் இருப்பதும் அதிமுகவை விஜய் போட்டியாகவே கருதவில்லையே என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இப்படியான சூழலில், விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்தநிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இவருக்கு அளித்த பதில் வினை என்ன பார்க்கலாம்.

விசிக சிந்தனைச் செல்வன்

”கருதியல் ரீதியாக பாஜகவை தவெக விமர்சிக்கவில்லை. பாஜகவிற்கு வாக்குகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தவெக. திமுகவுக்கு ஆதரவான அமைப்புகளிடையே குழப்பத்தை உருவாக்க முயல்கிறது தவெக. நூற்றாண்டு கால அரசியல் பாரம்பரியம் உள்ள திமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதி இல்லை. தேர்தல் களத்தில் முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை தவெக. அரசியல் முதிர்ச்சியே இல்லாத கட்சி தவெக. ” என்று தவெகவை விசிகவின் சிந்தனைச் செல்வன் விமர்சித்துள்ளார்.

திமுக கனிமொழி

“ எல்லாரும் திமுகவைத்தான் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக திமுகவிற்கு போட்டியாக யாரும் இல்லை. முதலமைச்சருக்கு போட்டியாக எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.” என்று தெரிவித்துள்ளார் கனிமொழி.

திமுக ஆர்.எஸ். பாரதி

” அதாவது திராவிட முன்னேற்றக்கழகம் என்பது 75 ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு ஆலமரம். யார் அரசியலுக்கு வந்தாலும் இந்த கட்சியை தொட்டுவிட்டுதான் செல்லவேண்டும். பலர் கட்சியை ஆரம்பித்தார்கள். இறுதியில் அவர்கள் திமுகவோடுதான் வந்து ஐக்கியமாகிவிட்டார்கள். ஆகையினால், யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலை இல்லை .. இதுயெல்லாம் பாஸிங் கிளவுட்ஸ் .. 75ஆண்டுகாலம் நிறைய பார்த்துவிட்டோம். ” என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக ஐ.பெரியசாமி

” திமுகவிற்கு எந்த கட்சியும் போட்டியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஜனநாயகத்தை நிலைநிறுத்தவது முதல் தளபதியார்தான். இது மன்னராட்சி இல்லை .. மக்களாட்சி.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. ” என்று திமுக ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி

” அவர் அவரது கருத்தை தெரிவிக்கிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே, அவ்வாறு பேசியுள்ளார். எல்லா கட்சிதலைவர்களும் அப்படிதான். நாங்கள் பிரதான எதிர்கட்சி என்று மக்கள் ஒப்புக்கொண்டு அதற்கான அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ” என்று அதிமுக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக சேகர்பாபு

” ஒரு சினிமா வரி பாடல்தான் நினைவுக்கு வருகிறது. மன்னர் ஆட்சி காத்து நின்றது எங்கள் கைகளே; மக்களாட்சி காணச் செய்தது எங்கள் நெஞ்சமே; என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே; கல்லில் வீடு கட்டி தந்தது எங்கள் கைகளே; கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே' என்ற பாடல் வரிகளை தான் அவர்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன். பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026 ஆம் ஆண்டு தூக்கிப்பிடிப்பார்கள்.

தவழுகின்ற குழந்தை நாங்கள் பி.டி.உஷா போல் பல்வேறு ஓட்டப்பந்தங்களை கண்டு வெற்றி பெற்றவர்கள். பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். ஆனால் அவர்கள் சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; போராட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; ஆர்ப்பாட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள்; புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்து அதை போட்டோ எடுத்து போட்டுக் கொண்டு அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருப்பது தான் தமிழகத்தின் நிலை. இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்'' என்று பேசியுள்ளார் திமுக சேகர்பாபு