திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் இவர் பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை ஜனவரி 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராகவே இருக்கிறது என்றும் திருவாரூர் தொகுதியில் மகத்தான வெற்றி பெறுவோம் எனவும் அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் திமுகவுக்கு சாதகமாகவே அமையும். திருவாரூர் தொகுதி திமுகவின் கோட்டை; திமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.
திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திருவாரூர் தொகுதி கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதி. எனவே அங்கு திமுக வேட்பாளர் போட்டியிடுவதுதான் மரபு. திமுக வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸூம், தோழமைக் கட்சிகளும் உழைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது குறித்து இனிதான் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றும் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது யாருக்கேனும் ஆதரவு கொடுப்பதா என்பது குறித்து முடிவு செய்வோம் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதி தேர்தல் குறித்து பேசிய அமமுகவின் புகழேந்தி, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. வரவேற்கிறோம். திருவாரூர் தொகுதியை இரண்டாவது ஆர்.கே.நகராக மாற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
திருவாரூர் தொகுதி தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என அக்கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.