தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்பகுதிகளில், 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார், 8000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச்சூழலில் தான், தமிழக அரசு சார்பில் தவெக முதல்வர் விஜயின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், அருண்ராஜ், பிரபு ஆகியோர் இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு நேரில் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறார். தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம். நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ”ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து, சமூகத்தில் தீண்டாமை நீங்கி சமத்துவம் தழைக்க பாடுபட்டவரும், தனது இளம் வயதிலேயே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியவரும், இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவரும், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 69-ஆவது நினைவு நாளான இன்று, அவர்தம் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.