Liquor Vending Machine
Liquor Vending Machine Pixabay
தமிழ்நாடு

தானியங்கி மூலம் மது விற்பனை; அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பும்.. அமைச்சரின் விளக்கமும்!

Snehatara

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஒரு வணிக வளாகத்தில், மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை திமுக அரசு தூண்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில், தானியங்கி மது விற்பனை நிலையங்களை உடனடியாக மூட வேண்டும் என்று வலிறுத்தியுள்ளார். இதுபோன்ற சட்டவிரோத மது விற்பனை நிலையங்களை எதிர்த்து பாமக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வதை எதிர்ப்பதாக கூறியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், 'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திரு.பழனிசாமி.” என்று குறிப்பிட்டுள்ளார்