தமிழ்நாடு

தேசிய அளவிலான அடுத்தக்கட்ட அரசியலை முன்னெடுக்கும் மு.க.ஸ்டாலின்?

Sinekadhara

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, பிற மாநில அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்வில், ராகுல் காந்தி கலந்துகொண்டு, முதல்வரின் சுயசரிதை நூலை வெளியிடுகிறார். நூல் வெளியீட்டு விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதையடுத்து, ராகுல்காந்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விருந்தளிக்கவுள்ளார். அப்போது, தலைவர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேசிய அளவிலான அடுத்தக்கட்ட அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான அணியை கட்டமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.