தமிழ்நாடு

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சிலை திறப்பு விழா: அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பங்கேற்பு

நிவேதா ஜெகராஜா

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு விழா மற்றும் 'சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி ' எனும் ஜனநாதன் குறித்த நினைவு மலர் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் , இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் , மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இயக்குநர்கள் அமீர், வ.கௌதமன், கரு.பழனியப்பன், சுசீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றுப் பேசினார்.

நிகழ்வின்போது நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், “நான் கம்யூனிசம் படித்ததில்லை. அது பற்றிய அறிவு எனக்கு அதிகம் கிடையாது. கம்யூனிசத்தை செயல் மூலமும், வாழ்ந்தும் காட்டியவர் ஜனநாதன். கம்யூனிசம், பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் அதை பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும். படங்களில் வார்த்தைகளை பார்த்து பார்த்து விதைப்பார். ஆயிரம் வார்த்தையை 5 வார்த்தையில் அடக்குவார்,  நான் வசனங்களை வேகமாக பேசுவேன். அதனால் என்னிடம் ‘நடிக்கும்போது வார்த்தை தெளிவாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார் அவர். என் வாழ்வில் நான் செய்த புண்ணியம் அவரது கடைசி படத்தை தயாரித்தது; சாபம், அது அவரின் கடைசி படமாக அமைந்தது” என்றார்.

தொல். திருமாவளவன் பேசுகையில், “சினிமா என்பது வணிக நோக்கம் கொண்ட வலிமையான ஊடகம். திரைத்துறையில் தத்துவத்தை பேசுவது மிகவும் கடினமானது. கடினமான இடத்திலும் வெற்றிகரமாக தத்துவங்களை பேசியவர் ஜனநாதன். இன்னும் 10 ஆண்டு வாழ்ந்திருந்தால் இந்தியளவில் கம்யூனிசம் குறித்த கருத்துகளை திரைப்படங்கள் மூலம் கொண்டு சென்றிருப்பார். கொள்கை, தத்துவம் என்பது வேறு வேறு. இரண்டை சார்ந்தும் அரசியல் இயக்கங்கள் இயக்குகின்றன. இட ஒதுக்கீடு என்பது கொள்கை, சமூகநீதி என்பது கோட்பாடு. மொழி உரிமை என்பது கொள்கை, தமிழ்த் தேசியம் என்பது கோட்பாடு. தத்துவத்தை அடிப்படையாக கொண்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் அதை திரைமொழியில் பேச அதிகம் அறிவாற்றல் வேண்டும். மார்க்சியம் , லெனினியம் என்பதெல்லாம் இயங்கியல் பார்வையில் பார்க்க வேண்டியது. மேலும் கட்சிகளை அடையாளப்படுத்தாமல் தத்துவத்தை பேசினார் ஜனநாதன்.

திரையுலகில் வெற்றி என்பது லாபம்தான். உழைப்பை சுரண்டினால்தான் லாபம் ஈட்ட முடியும். படங்களில் 4 குத்தாட்டம் , சண்டை , காதல் காட்சி , கவர்ச்சிகரமான கதாநாயகன் கதாநாயகி, பஞ்ச் வசனம் இருக்க வேண்டும் என இயக்குநர், தயாரிப்பாளர்கள் நினைப்பார்கள். ஆனால் ஜனநாதன், அது குறித்தெல்லாம் யோசிக்காமல் சர்வதேச அரசியல், பொருளாதாரம், மருந்து உற்பத்தி குறித்து படங்களில் பேசியவர். கொரோனா திட்டமிட்ட சதி என முன்கூட்டியே கண்டறிந்து கூறியவர்.

கம்யூனிஸ்டுகள் மட்டுமே சர்வதேச பார்வைகளுடன் பிரச்சனைகளை அணுகுவர். இந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டவர் ஜனநாதான். இங்கு திறக்கப்பட்ட ஜனநாதன் சிலையை அரசே ஏற்று பொது இடத்தில் வைக்க வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக விஜய் சேதுபதி கூறினார். அனைத்து கட்சியினரும் இதை நிறைவேற்ற முன்வர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “கம்யூனிஸ்ட் கட்சி பலமாக உள்ள கேரளாவை விட தமிழகத்தில் கம்யூனிச கருத்துகளை திரைப்படங்கள் மூலம் அதிகம் பேச முடிகிறது. ரஞ்சித் உள்ளிட்டோர் திரைப்படங்களில் முன்னெடுக்கும் மாற்று அரசியல் மூலம் உலக மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளனர். ஆண்டி இந்தியன் படம் மதவாதிகளை பற்றி செறிவுடன் கூறியுள்ளது. மதம் என்பது மின்சாரம் போன்றது. அதை கையாள்வது கடினமானது.

ஜெய்பீம் பட கதையின் களப்போராளிகளாக 15 ஆண்டுக்கு மேலாக நாங்கள் இருந்தோம். திரைப்படம் மூலம் இன்று அது உலகம் முழுவதும் போய் சேர்ந்துள்ளது. மாநாடு, ஜெயில் , கர்ணன், அசுரன் படங்கள் புதிய செய்தியுடன் வந்துள்ளன” என்றார்.

பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசுகையில், “இயற்கை, புறம்போக்கு படங்களை பார்த்துவிட்டு நான் கண்ணீர் விட்டு அழுதுள்ளேன். எளிய முறையில் வாழ்ந்து காட்டியவர். புறம்போக்கு படம் தொடர்பாக ஜனநாதன், விஜய் சேதுபதியிடம் அமர்ந்து பேசும்போது இவ்வளவு பெரிய காரியத்தை செய்பவர்கள் எளிமையாக, சாதாரணமாக இருக்கிறார்களே என நினைத்து பெருமைப்பட்டேன். அரசியல்வாதிகள் பேசலாம் விமர்சிக்கலாம், போராடலாம். ஆனால் கருத்தியல்களை படம் மூலம் பேசியவர் ஜனநாதன். 'வெண்நிற இரவு ' என்ற ரஷ்ய நாவலை படித்த பிறகே எழுதத் தொடங்கியதாக கூறியிருந்தார். எளிய விஷயங்களை, ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையை படங்களில் காட்டியவர் அவர். ஜனநாதனின் வாழ்க்கை அனைவருக்கும் பாடமாக வேண்டும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேசுகையில், “சினிமாவில் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி சொன்னால் பணம் வீணாகிவிடும் , வெற்றி பெறாது என பயப்படுவார்கள். ஆனால் 'சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி' என்று புத்தகமே வெளியிடப்படுகிறது. அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்று வருகிறார் திருமாவளவன். பொதுத் தொகுதி 2ல் வென்றுள்ளது விசிக. உலகில் இடதுசாரி, வலதுசாரி என இரண்டே கொள்கைகள்தான் உள்ளன. 'மின்சாரம் இல்லாமல் மட்டுமில்லை , மார்க்ஸ் இல்லாமலும் உலகம் இல்லை..' என்று ஒரு கவிதையில் சொன்னார் வைரமுத்து . இப்படி வைரமுத்து, திருமாவளவன் போல எங்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்பதுதான் பிரச்சனை, அதனால் மக்களுக்கு எங்களை தெரிவதில்லை. மக்களிடம் எங்களை புரிய வைப்பதே சிரமமாக உள்ளது. மார்க்ஸ்சும், ஏங்கெல்ஸ்சும் சமூக விஞ்ஞானிகள். பைபிள் , குரான் போல உலகின் பல மொழிகளில் கம்யூனிசம் இருக்கிறது” என்றார்.

- செல்வா