தமிழ்நாடு

தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்

தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்

kaleelrahman

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தனது அரசியல் பயணத்தில் மிகப்பெரிய போராளியாக காணப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932 ஆண்டு பிறந்தார். அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியை தொடங்கிய அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி 1983 முதல் 2000 வரை மாநில செயலாளராக இருந்தார். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார். 2005 முதல் 2015 வரை தொடர்ந்து மூன்றுமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வானார்.

இளம் வயதிலேயே கட்சியின் தேசியகுழு உறுப்பினரான தா.பாண்டியன் இறுதிவரை அப்பொறுப்பில் இருந்தார். 1989, 1991 தேர்தலில் வெற்றிபெற்று இரண்டுமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மொழிபெயர்த்துள்ள தா.பாண்டியன். 1962ல் ஜனசக்தியில் எழுதத் தொடங்கி தொடர்ந்து எழுதிவந்தார். ஆரம்ப காலத்தில் சவுக்கடி என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். இவர் எட்டு நூல்கள் மற்றும் ஆறு மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய மேடைப்பேச்சு, பொதுவுடையரின் வருங்காலம் போன்ற நூல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.