நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவே வியக்கும் பல்வேறு திருப்பங்கள் நடந்துள்ளது. இந்த தேர்தலில் கட்சி தொடங்கி 2 வருடங்களே ஆன நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தமிழ்நாட்டின் மிகப்பெரும் கட்சியாக உருவானது. திமுக கூட்டணி 73 இடங்களோடு இரண்டாம் இடம் பிடிக்க, அதிமுக கூட்டணி 53 இடங்களோடு 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளில் அதிக முறை ஆட்சி செய்த கட்சியான அதிமுகவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
1972-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக, தான் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே அதாவது 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் ஆட்சியை பிடித்தது. அதற்கு முன்னர் வரை தமிழ்நாட்டின் அரசியல் களம் திமுக வெர்சஸ் காங்கிரஸ் என்றே இருந்தது. ஆனால் 1977 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 130 இடங்களை வென்று ஆட்சியை பிடிக்க, திமுக 48 இடங்களோடு 2-ம் இடம் பிடித்தது.
1946-ம் ஆண்டில் இருந்து 1967-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் இருந்த காங்கிரஸ் 1977 சட்டமன்றத் தேர்தலில் 27 இடங்களை பிடித்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்த தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் களம் அப்படியே மாறி திமுக வெர்சஸ் அதிமுக என்று மாறியதோடு, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தேர்தல்களில் இந்த இரு கட்சிகளை சார்ந்தே இயங்கவேண்டிய நிலைக்கு மாறியது. இப்போது அதிமுக பல்வேறு உள்கட்சி மோதலில் சிக்கியுள்ளது போல அப்போதும் காங்கிரஸ் உள்கட்சி மோதலில் சிக்கித்தவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடந்து முடிந்த 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிலை அதிமுகவுக்கு வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுவாகவே வலிமையாக இருக்கும் இரு கட்சிகளை தாண்டி மூன்றாவதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, அதற்கு முன்னர் இருந்த சக்திவாய்ந்த ஒரு கட்சி புதிதாக வந்த கட்சியிடம் தனது பலத்தை இழப்பதே இந்திய அரசியல் வாடிக்கையாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கூட காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியிடமும், ஆந்திராவில் YSR காங்கிரஸ் கட்சியிடமும் தனது நிலையை இழந்தது. அதேபோல, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பாஜகவிடமும், பஞ்சாபில் அகாலி தளம் ஆம் ஆத்மி கட்சியிடமும் தனது நிலையை இழந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.