அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப்பூசல் காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில் ஏற்கனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஓ. பன்னீர் செல்வம் அக்கூட்டணியில் இருந்து விலகியிருந்தார்.
அதே சமயத்தில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்க முடியாது என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது, மீண்டும் அக்கூட்டணியில் இணைந்திருக்கிறார். தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனும் அதிமுக ஒருங்கிணைப்பு என்ற கோரிக்கையை விடுத்து தவெகவில் இணைந்துவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், ஓ. பன்னீர் செல்வம் தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துகொள்ள யாருடனாவது கூட்டணி வைத்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஓ. பன்னீர் செல்வத்தின் முதல் தேர்வு தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருந்தாலும், ஓபிஎஸ்-ன் வருகையை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதேசமயத்தில், ஓ. பன்னீர் செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஓபிஎஸ் இடமிருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டனர். மேலும், ஓபிஎஸ் ஆதரவு மாநிலங்களவை எம்.பி தர்மரும் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். இவ்வாறு, ஓ. பன்னீர் செல்வத்தில் ஆதரவாளர்கள் தொடர்ந்து விலகி வருவது மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தான், ஓ. பன்னீர் செல்வம், திமுக அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து 15 நிடங்களுக்கும் மேலாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் அறையில் திமுக அமைச்சர் சேகர் பாபுவும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் சந்தித்துப் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம், ஓ. பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.