தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில் கூட அவர், எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருவதாக விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தான் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்திn செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பேசுகையில், “ எனக்கு அழுத்தம் இருக்கிறது என்று நினைக்கிறார்களா? அழுத்தத்துக்கு அடங்கும் ஆளா நான். ஆனால், அழுத்தம் இல்லை என்று நான் சொல்லவில்லை. அழுத்தம் இருக்கிறது. அது நமக்கு அல்ல; மக்களுக்கு. தமிழ்நாட்டை இது முன்னால் ஆண்டவர்களும் பாஜகவுக்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள். திமுகவும் அவர்கள் மாதிரி தான் இருக்கிறார்கள். அவர்களாவது பரவாயில்லை நேரடியாக அடிமையாக இருக்கிறார்கள். ஆனால், திமுகவினர் மறைமுகமாக அடிமையாக இருக்கிறார்கள். அதனால் தான், அவர்களின் வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
இரு கட்சிகளும் பாஜகவுக்கு அடிமையாக இருக்கும் இந்த சூழலில் தான், தமிழக மக்கள் நம்மை நம்புகிறார்கள். நாம் புதிய கட்சி அவர்களுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என நம்மை சிலர், குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், அது எனக்கு பழக்கமானது தான். அதேசமயத்தில், தமிழக மக்கள் நம்மை சரியாக மதிப்பிடுகிறார்கள். அதனால் தான், உச்சத்தில் வைத்திருக்கிறார்கள். யாரிடமும் அண்டிப்பிழைப்பதற்காகவோ, அடிமையாக இருப்பதற்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை. என் மண்ணுக்கும் மக்களுக்கும் பிரச்னை ஏற்படும்போது அதை தடுக்கவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
நான் அரசியலுக்கு வரும்போது ஒரு ரூபாயில் கூட ஊழல் செய்யமாட்டேன். எனக்கு அந்த அவசியமும் கிடையாது. சினிமா பாணியில் நான் சொல்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், எதற்கும் ஆசைபடாத ஒருவன் தவறுகள் நடக்கும்போது நிச்சயம் அதை தட்டிக் கேட்பான். மாற்றத்தை யாராவது தொடங்கி வைக்க வேண்டும்
அதேசமயத்தில், தமிழக மக்களுக்கு என்மீது மட்டும் நம்பிக்கை இருந்தால் மட்டும் பத்தாது, உங்கள் எல்லோர் மீதும் நம்பிக்கை வரவேண்டும். எனவே, ஒருங்கிணைந்து செயல்பட்டு நம்முடைய சின்னமான விசில் சின்னத்தில் மக்களை வாக்களிக்க வைக்க வேண்டும். நடக்கவிருப்பது வெறும் தேர்தல் அல்ல; இது ஜனநாயகப்போர். உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்பது உண்மையானால், அதை தேர்தல் பணிகளில் காட்டுங்கள். நம்முடைய கொள்கைத் தலைவர்களுள் ஒருவரான வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுத்ததைப்போல, நாமும் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்” எனத் தெரிவித்தார்.