தமிழ்நாடு

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி - துக்கம் தாளாமல் மாடியில் இருந்து குதித்த காவலர்

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த துக்கம் தாளாமல், சிறப்பு காவல் உதவியாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகிய நிலையில், அவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சுஜாதா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் வயிற்று வலி குணமாகாத நிலையில் சுஜாதா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் பர்கூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்ல வந்த புருஷோத்தமன் அவரை பர்கூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு காவலர் குடியிருப்பில் தங்க வைத்து காவல்நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து மீண்டும் சுஜாதாவை பார்க்கச் சென்றபோது, அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சுஜாதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து மனமுடைந்த புருஷோத்தமன் இன்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் பா முத்தம்பட்டி பகுதியில் வீட்டின் மாடியில்
இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.