தமிழ்நாடு

“குழந்தைகள் தொடர்புடைய ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்” - காவல்துறை எச்சரிக்கை

webteam

குழந்தைகளை ஈடுபடுத்தி வெளிவரும் ஆபாசப் படங்களைக் காண்பது குற்றம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகளை ஈடுபடுத்தி எடுக்கப்படும் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், குறிப்பாக இதில், சென்னை முதலிடம் வகிப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. திரட்டிய தகவல்கள் மத்திய உள்துறைக்கு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. 

இதையடுத்து, பாலியல் குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகும் இதுபோன்ற ஆபாச படங்களைப் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி எம்.ரவி தெரிவிக்கிறார்.

இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்களை எடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை என காவல்துறையினர் கூறுகின்றனர்.