தமிழ்நாடு

வனப்பகுதி மலைமீது அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் : மீட்புப் பணியில் போலீஸார்

webteam

ஆம்பூர் அருகே வனப்பகுதியை சேர்ந்த மலை ஒன்றின் மீது அழுகிய நிலையில் இருக்கும் பெண்ணின் சடலத்தை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் வனப்பகுதியில் மலைக்குன்றுகள் நிறைய உள்ளன. இங்கே அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். இந்நிலையில், வழக்கம் போல கால்நடைகளை மேய்க்க சென்ற சிலர், மலைப்பகுதியில் பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆம்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அத்துடன் அழுகிய நிலையில் சடலமாக கிடக்கும் பெண்ணின் வயது 35 வயது இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சடலம் மலைக்குன்றின் மீது இருப்பதால் அதை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சடலத்தை கைப்பற்றிய பின்னர் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதன்பின்னர் மேற்கொள்ளப்படும் விசாரணையில் இது தற்கொலையா ? கொலையா ? உள்ளிட்ட காரணங்கள் கண்டுபிடிக்கப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.