தமிழ்நாடு

காவல்துறை கட்டுப்பாட்டில் வந்தது சென்னை விமான நிலையம் - நேரு உள்விளையாட்டரங்கம்!

webteam

பிரதமர் மோடி சென்னை வருகையால் காவல்துறை கட்டுப்பாட்டில் சென்னை விமான நிலையம் மற்றும் நேரு உள்விளையாட்டரங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். தனி விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை சென்னை வரும் பிரதமர் விமான நிலைய வி.ஐ.பி அறையில் சிறிது நேர ஒய்வுக்கு பின் அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 6 மணியளவில் நேரு விளையாட்டு அரங்கம் செல்கிறார்.

இதற்காக விமான நிலையம் உள்ளிட்ட பிரதமர் பயணிக்கும் இடத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 22 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் விமான நிலையம் உள்ளிட்ட பிரதமர் பயணிக்கும் இடத்தில் 2 நாட்கள் ட்ரோன் கேமிராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழா நடக்க இருக்கும் நேரு விளையாட்டு அரங்கத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அடையாள அட்டை இருக்கும் ஊழியர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். காவலர்கள், ஊடகத்தினருக்கு அடையாள இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி. அதேபோல் அரங்கம் உள்ளே சி.சி.டி.வி கேமிரா மூலம் கண்காணிப்பு செய்யும் பணியையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.