தமிழ்நாடு

மத உணர்வை தூண்டும்படி பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்

webteam

மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றபோது, கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில், ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், காஞ்சிபுரம் அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாதென அவர் கேட்டுக் கொண்டார். கடந்த காலத்தில் இஸ்லாமியர்களுக்கு அஞ்சி அத்திவரதர் மறைத்து வைக்கப்பட்டதாகவும், தற்போது அந்தச் சூழல் இல்லை என்றும் ஜீயர் கூறியிருந்தார். 

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சையது அலி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஜீயர் சடகோப ராமானுஜருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 22ஆம் தேதிக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி ஜீயருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.