சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ரவுடிகளை ஒழிப்பதில் திறமையாக செயல்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 4ம் தேதி ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது உதவி ஆய்வாளரும் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், காவல் நிலையத்துக்கு வந்தது முதல் தற்கொலை செய்து கொண்டது வரையிலான அனைத்து சம்பவங்களும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. சதீஷ்குமார், சாதாரண உடையில் காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது பொறுப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவியிடம், சாவி வாங்கி, பிஸ்டலை எடுத்த அவர், வெள்ளைத் தாளில் 4 வரிகள் எழுதிவைத்துவிட்டு, பிஸ்டலை நெற்றிப் பொட்டின் மீது வைத்துள்ளார். பதறிய சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவி, விளையாட்டு வேண்டாம் என எச்சரித்துள்ளார். பின்னர் அவரை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய சதீஷ்குமார், பின்னர் நுழைவாயில் அருகே சென்று வலதுபுற நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
ரவுடி ஒழிப்பில் பாராட்டு பெற்றவர்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள மேலையூரைச் சேர்ந்த சதீஷ்குமார், கடந்த 2011ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். கடந்த 2014ம் ஆண்டு முதல் அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். 33 வயதான சதீஷ்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பட்ட மேற்படிப்பு படித்த அவர், டிபி.சத்திரம் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அயனாவரத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் திறமையாக செயல்பட்டவர் என்று பாராட்டு பெற்றவர் இவர்.
இந்த தற்கொலை தொடர்பாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் காவல்துறையினர் அயனாவரம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.