Madurai High court branch pt desk
தமிழ்நாடு

விசாரணைக்கு சென்றவர் உயிரிழந்த விவகாரம் | ”அவர் என்ன தீவிரவாதியா?” - நீதிபதி சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: இ.சகாய பிரதீபா

பரமக்குடியைச் சேர்ந்த செந்தில்வேல் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் மாரீஸ் குமார் ஆகியோர் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வு முன்பாக முறையீட்டை முன்வைத்தனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் தங்கள் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய அஜித் என்ற இளைஞரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். அஜீத் காவல்துறையினர் தாக்கியதாலேயே உயிரிழந்துள்ளார். இது போன்ற சட்டவிதோர காவல் மரணங்களை ஏற்க இயலாது. ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுமென முறையீடு செய்தனர்.

அதற்கு நீதிபதகள், 'கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவர் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம். அவ்வாறின்றி ஒரு சாதாரண சந்தேக வழக்கில் அவரை விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை என கருத்து தெரிவித்து, இதனை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக கூறியுள்ளனர்.