Nagai Barricade issue
Nagai Barricade issue   Vishnu Varthan, PT Desk
தமிழ்நாடு

போராட்டக்காரரை பூட்ஸ் காலால் உதைத்த எஸ்.ஐ மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை!

Snehatara

நாகையில் அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்பு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் அடித்து, பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து கைதுசெய்த விவாகரத்தில் அவரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது காவல்துறை.

தமிழக எல்லையான நாகையை அடுத்த நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் (திருமருகல் சாலையில்) இருசக்கர வாகனங்கள் மூலம் நடக்கும் சாராய கடத்தலை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு சாலைகளில், இரண்டு சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பேருந்து மற்றும் பெரிய வாகனங்கள் வளைய முடியாமல் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.

Nagai Barricade issue

இந்த தடுப்புகளால் நேற்று கும்பகோணத்தில் இருந்து நாகை சென்ற இரண்டு அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அவ்வழியே சென்ற உள்ளூர் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டுமென கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் வெகுநேரம் சிரமபட்டதை அடுத்து வாக்குவாதத்திற்கு பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாக தாக்கி ஒருமையில் பேசினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டம் நடத்திய நபரை கடுமையாக தாக்கி, காவல் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து அடாவடியில் ஈடுபட்டார். தொடர்ந்து காவல் வாகனத்தில் அந்நபரை ஏற்றிய பிறகும் வாகனத்தின் உள்ளே இருந்த சக காவலர்கள் கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தாக்கியபடி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Nagai Barricade issue

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல் உதவி ஆய்வாளருக்கு கண்டனங்கள் வலுத்தது. இவ்விவகாரத்தில் நாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.